பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை - சென்னை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் பெண் ஊழியர்கள் தங்கும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதள பக்கம் மூலமாக பதிவு செய்யவேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்ய அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, போலீஸ் சரிபார்ப்பு சான்று, உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ், தணிக்கை அறிக்கை மற்றும் சுகாதாரதுறைத்சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com என்ற இணையதளத்தில் நவம்பர் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்த சந்தேகங்களுக்கு 91500 56800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முறையாக பதிவு செய்யப்படாத தனியர் விடுதி மற்றும் அதன் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி போலீசில் வழக்குபதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com