உரிமம் இன்றி இல்லங்கள் விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் இன்றி இல்லங்கள், விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
உரிமம் இன்றி இல்லங்கள் விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துரித நடவடிக்கை

தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு மற்றும் சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று மற்றும் பார்ம் டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். மேலும் ஒரு உள்ளுரையோர் தங்குவதற்கு சராசரியாக சிறார்களுக்கு 40 சதுர அடி மற்றும் மகளிருக்கு 120 சதுர அடி இடத்தை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காண விடுதி காப்பகங்களில் விடுதி காப்பாளர் பெண்ணாகவும் விடுதி பாதுகாவலர் ஆண், பெண் ஆகவும் இருக்கவேண்டும். மேலும் பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பதிவேடுகள் பராமரிப்பு

விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு, விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும். விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்யவும் மற்றும் உரிமம் பெற தேவையான படிவங்களை https://kallakurichi.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், தொலைபேசி எண் (04151-295098) மற்றும் dswokallakurichi@gmail.com மற்றும் dcpukkr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com