சென்னை உயர்நீதிமன்றத்தில்காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தகவல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில்காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தகவல்
Published on

சட்ட விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் தேசிய சட்டப்பணிகள் ஆணையம், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட உதவி மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நசீர்அகமது வரவேற்றார். மாவட்ட கலெக்டர்கள் விழுப்புரம் மோகன், கள்ளக்குறிச்சி ஷ்ரவன்குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய மந்திரி பங்கேற்பு

விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டு, சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட உதவி மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சட்டப்பணிகள் ஆணையம் குறித்த சட்ட புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 398 பயனாளிகளுக்கு ரூ.2.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மாணவர்களை, அவர்களின் எதிர்காலத்தோடு இணைக்கும் அமைப்பாக திகழ்கின்றன. இங்கு வந்துள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வக்கீல்களாகவோ, நீதிபதியாகவோகூட ஆகலாம். அதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படும்

வசதி படைத்தவர்கள், தங்களது வழக்குகளுக்காக, சட்ட உதவிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவர். ஆனால் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் சட்ட உதவிக்காக, நீதிக்காக ஏங்குகின்றனர். எனவேதான் மத்திய அரசு ஏழை மக்களை கண்டறிந்து சட்ட உதவி மையங்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. வழக்குகளில் நீதி கிடைத்தாலும் அது தரமான நீதியாக இருக்க வேண்டும். வழக்குகளில் தீர்வு கிடைப்பது முக்கியமல்ல. அதன் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் நடைபெறும் சட்ட உதவி மூலம் பல்வேறு சட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களில் காலியிடங்கள் உள்ளன. விரைவில் அந்த இடங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவர். இதன் மூலம் அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும். கொலிஜியமும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் இணைந்து செயல்படுகிறது. மாற்றுமுறை தீர்வு மையங்களையும் உருவாக்கியுள்ளோம். பல்வேறு தீர்ப்பாயங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

வளர்ச்சிபெற்ற நாடாக...

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களிடம் சென்றடையும் நோக்கத்தில்தான் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், 2014-ம் ஆண்டு முதல் பயனாளிகளுக்கு பல்வேறு திட்ட உதவித்தொகை, மானியம் போன்றவற்றை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடைசி பயனாளி வரை பயன்பெறுகின்றனர். இந்தியா தற்போது 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. எனவே 2047 -ம் ஆண்டில் இந்தியா தனது நூற்றாண்டை கொண்டாடும்போது, அனைத்திலும் வளர்ச்சிபெற்ற நாடாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, நீதிபதிகள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com