

சென்னை,
ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுதபூஜை கொண்டாடிய லெஜண்ட் சரவணன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழக முதல்-அமைச்சர் அன்பு சகோதரர் விஜய் நினைத்தால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை ஒரே வினாடியில் மாற்றி அமைக்க முடியும்" என்று பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் பேசிய பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னை பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து லெஜண்ட் சரவணன் கோலாகலமாக கொண்டாடினார். அங்கு திரண்டிருந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர்களுடன் அமர்ந்து அவர் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
ஆட்டோ ஓட்டுநர்களின் தற்போதைய அவல நிலையை மிகவும் உருக்கமாக எடுத்துரைத்தார். "ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பல நியாயமான தேவைகளை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், அவை இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். "தமிழக முதல-அமைச்சர் அன்பு சகோதரர் விஜய்க்கு என் பணிவான வேண்டுகோள். இந்த ஆட்டோ தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களும், பெண் ஓட்டுநர்களும் இருக்கிறார்கள். விஜய் சார்.. நீங்கள் நினைத்தால் ஒரே ஒரு செகண்டில் இவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதன் மூலம் இவர்களது வாழ்க்கையை செழிக்க வைக்க முடியும்" என கோரினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. இன்று இளைஞர்கள் அனைவரும் பைக்குகளிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால், ஆட்டோக்களை நம்பி இருக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு வருபவர்கள் மட்டும்தான் இப்போது ஆட்டோவில் பயணிக்கும் சூழல் உள்ளது. சவாரி குறைந்துவிட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
எனவே, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். ஆயுதபூஜை மேடையில், ஆட்டோ தொழிலாளர்களுக்காக முதல்-அமைச்சர் விஜய்க்கு லெஜண்ட் சரவணன் விடுத்த இந்த அன்பான, வேண்டுகோள் தற்போது ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.