

சென்னை,
சட்டசபை தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவாகி உள்ளது.
சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஒரு தரப்பும், எஸ்.பி.வேலும ணிதான் என்று மற்றொரு தரப்பும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர்தான்? ஏனென்றால் அவர்தான் கட்சி கொறடா யார்? என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். ஆனால் அதில் தான் பெரும் பிரச்சினை இருக்கிறது.
ஏனென்றால் இருதரப்பும் தங்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து இருக்கிறார்கள். அதில் சுவாரசியம் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி தனக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்று அவர்களின் கையெழுத்தோடு கடிதம் கொடுத்து இருக் கிறார். அதேபோல பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கையெழுத்தோடு, வேலுமணியும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில், அதிமுக பிளவுபட்ட நிலையில் தங்கள் தரப்பு கொறடாவை அங்கீகாரம் செய்ய வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர். அதிக ஆதரவு உள்ளதால் தங்கள் தரப்பையே அங்கீகரிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைபோல எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவை ஏற்க வேண்டும் என்றும் சட்ட விதிகளின்படி பரிசீலனை செய்வதாக சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாகவும் ஈபிஎஸ் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவர், கொறடா நியமன விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.