

சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. வாக்குப் பட்டியல், வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் வந்துள்ளன. இரண்டு நாளில் 15 துணை ராணுவத்தினர் வர உள்ளனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ படையினர் கேட்டுள்ளோம். அரசு பொது இடங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்ட 53,404 போஸ்டர்கள், பேனர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்த புகாரில் 46 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கு தலா 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது என்றும், இறந்த தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.