தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்இரவில் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் வண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்இரவில் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் வண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆட்டை கொன்ற சிறுத்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை ஊராட்சிக்குட்பட்டது இஸ்லாம்பூர் கிராமம். இந்த கிராமத்தின் அருகே சன்னத்து ஓடை என்ற இடம் உள்ளது. இதன் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி ஒரு ஆட்டை இழுத்து சென்றது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான வன குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கு தடயங்கள் உள்ளதா? என சோதனை நடத்தினர். அதில் சிறுத்தையின் கால் தடயங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுவட்டார கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஓசூர் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வன குழுவினர் சம்பவ இடத்தை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. அதில் சிறுத்தையின் உருவம் பதிவாகி உள்ளது. இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எச்சரிக்கை

இந்த சிறுத்தை தற்போது தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகில் சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைக்கலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பண்டேஸ்வரம், பேலூர், எண்ணேஸ்வரமடம், பென்னங்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன. எனவே அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள். மேலும் வருவாய்த்துறையினர், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் வெளியில் மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும். சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com