கபிலர்மலை பகுதியில்தொடரும் சிறுத்தைப்புலி அட்டகாசம்கூண்டு வைத்து பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

கபிலர்மலை பகுதியில்தொடரும் சிறுத்தைப்புலி அட்டகாசம்கூண்டு வைத்து பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
Published on

பரமத்திவேலூர்:

கபிலர்மலை பகுதியில் தொடரும் சிறுத்தைப்புலியின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

சிறுத்தைப்புலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜா என்பவரின் மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுகுட்டி மற்றும் அதே பகுதியில் கட்டப்பட்ட வளர்ப்பு நாயை கடந்த 5-ந் தேதி மர்மவிலங்கு கடித்து கொன்றது. இதையடுத்து மர்ம விலங்கின் கால்தடங்களை வைத்து ஆராய்ந்ததில் ஆடு, நாயை கொன்றது சிறுத்தைப்புலி என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தைப்புலியை பிடிக்ககோரி இருக்கூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து வனச்சரகர் பெருமாள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைத்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்டை கொன்றது

சிறுத்தைப்புலி சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து காவிரி கரையோரமாக இருக்கூர் பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சூரியாம்பாளையத்தில் விவசாயி பழனிவேல் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலி அதனை கரும்பு தோட்டத்தில் போட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருக்கூர் அருகே செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி தாக்கி சுமார் 300 மீட்டருக்கு தூக்கி சென்று போட்டது.

பொதுமக்கள் அச்சம்

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் கால்தடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள் அமைத்தும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஊராக சென்று சிறுத்தைப்புலி கால்நடைகளை கடித்து அட்டகாசம் செய்து வருவதால் கபிலர்மலை மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தைப்புலி தெடர்ந்து இடம் விட்டு இடம் நகர்ந்து வருவதால் அதை கூண்டு வைத்து பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

சுற்றித்திரிய வேண்டாம்

மேலும் வருவாய்த்துறை சார்பில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ள பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் யாரும் நடமாட வேண்டாம் எனவும், தேவையற்ற முறையில் சுற்றித்திரிய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com