

சென்னை,
சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1700-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஒரு ஜோடி சிறுத்தைப்பூனை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தனியாக ஒரு கூண்டில் வைத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பூங்கா நிர்வாகம் பராமரித்து வந்தது.
இந்த நிலையில் தனியாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுத்தைப்பூனை நேற்று முன்தினம் திடீரென கூண்டில் இருந்து தப்பி பூங்கா வளாகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தைப்பூனையை தேடும் பணியில் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு வண்டலூர் பூங்காவுக்கு ஒரு ஜோடி சிறுத்தைப்பூனை விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.