மோகனூர் அருகேகூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்?

மோகனூர் அருகேகூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்?
Published on

மோகனூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பேட்டப்பாளையம் ஊராட்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்பு, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகியவையும் அப்பகுதியில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் குடியிருப்பில் வசிக்கும் டேனியல் என்பவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது ஏராளமான நாய்கள் ஒன்று திரண்டு சத்தம் போட்டதாக தெரிகிறது. அப்போது சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று மெதுவாக நடந்து சென்றதாம். இதை பார்த்த டேனியல் பயந்து வீட்டிற்குள் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது அந்த விலங்கு இருட்டான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அவர் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் கூறினார். இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், வனவர் விஜயபாரதி ஆகியோர் அப்பகுதிக்கு சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் சிறுத்தை நடமாடுவதற்கான அறிகுறிகள் இல்லை என்றும், இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறினர்.

இதுகுறித்து வனவர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்த கால்தட பதிவும் இல்லை. பல இடங்களில் நாய்களின் கால்தட பதிவு தான் உள்ளது. எனினும் சில நாட்களாக அப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com