மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி: தேனி அ.தி.மு.க. எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் 2 பேர் கைது

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேனி அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி: தேனி அ.தி.மு.க. எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் 2 பேர் கைது
Published on

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 27-ந்தேதி சோலார் மின்வேலியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். அப்போது அந்த சிறுத்தை தாக்கியதில் உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் காயம் அடைந்தார்.

அதற்கு மறுநாள் அதே பகுதியில் சோலார் மின்வேலியில் சிக்கி 2 வயது ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது. அடுத்தடுத்து மின் வேலியில் சிறுத்தைகள் சிக்கிய சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வேலி அமைக்கப்பட்ட இடம் தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கு சொந்தமான தோட்டம் என்று தெரியவந்தது. அந்த தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த ஆடுகளை சிறுத்தை அடித்து சென்றதும், அதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்காமல் மறைத்த விவரமும் தெரிந்தது. இதையடுத்து ஆட்டுக்கிடை அமைத்த பூதிப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (வயது 35) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலாளர்கள் கைது

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான பெரியகுளத்தை சேர்ந்த தங்கவேல் (42), ராஜவேல் (28) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் இரவில் தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர்.

எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் கைது செய்யப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட ஆட்டுக்கிடையில் அடுத்தடுத்து ஆடுகளை சிறுத்தை அடித்து சென்றுள்ளது. அந்த தகவலை வனத்துறைக்கு உடனடியாக கொடுத்து இருந்தால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடித்து இருக்கலாம். அதன் மூலம் வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்டு அதன் உயிரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. தகவல் கொடுக்காமல் மறைத்ததால் சிறுத்தை உயிரிழக்க அவர்களும் ஒருவிதத்தில் காரணமாக இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com