வால்பாறையில் 5 வயது சிறுவனை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தை-வனப்பகுதியில் உடல் மீட்பு

வீட்டில் இருந்து சிறிது தொலைவில் வனப்பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் பின்புறம் சிறுவன் கழுத்தில் சிறுத்தை கடித்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தான்.
வால்பாறையில் 5 வயது சிறுவனை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தை-வனப்பகுதியில் உடல் மீட்பு
Published on

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட்டில் ஜே.இ. பங்களா டிவிசன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு தமிழக, வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜா வலி-ஷாஜிதா பேகம் தம்பதியினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் 5 வயது சிறுவனான சைபுல் ஆலம் தனது அண்ணனுடன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். பெற்றோர் வீட்டில் இருந்தனர்.

அப்போது தேயிலை தோட்டத்திற்குள் இருந்து வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் சைபுல் ஆலமை கவ்வி இழுத்து சென்றது. இதனை பார்த்த பெண் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் சத்தம்போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் சிறுத்தை சிறுவனை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. மகனை சிறுத்தை கவ்விச்சென்றதை அறிந்த ராஜா வலி-ஷாஜிதா பேகம் கதறி அழுதனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக இதுகுறித்து வால்பாறை வனத்துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், போலீசார், தேயிலை தோட்டதொழிலாளர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் வனப்பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் பின்புறம் சிறுவன் கழுத்தில் சிறுத்தை கடித்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தான். உடனே வனத்துறையினர், போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பச்சைமலை எஸ்டேட், நடுமலை எஸ்டேட், ஊசிமலை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை தாக்கி சிறுவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com