தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - தொழிலாளர்கள் பீதி

சிறுத்தை நடமாடிய தோட்டத்திற்குள் சென்று தேயிலை பறிக்க தொழிலாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - தொழிலாளர்கள் பீதி
Published on: 

நீலகிரி,

குன்னூர் பந்துமை தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது. குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் புகுந்து வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான பூனை, நாய்களை வேட்டையாடி செல்வதும் அதிகரித்து வருகிறது.

சிறுத்தை நடமாட்டம்

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பந்துமை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று செல்லப்பிராணிகளை வேட்டையாட உலா வந்தது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் தேயிலை தோட்டங்களில் சிறுத்தை சுற்றித்திரிந்தது. பின்னர் அது வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

தொழிலாளர்கள் பீதி

தேயிலை தோட்டங்களுக்குள் சிறுத்தை சுற்றித்திரிவதை அறிந்ததும் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். சிறுத்தை நடமாடிய தோட்டத்திற்குள் சென்று தேயிலை பறிக்க தொழிலாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அதை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். அது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com