

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் பகுதியில், வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடிகோட்டம், மசினகுடி வன சரகம் அவரல்லா பிரிவு காப்புக்காடு ஆளுமைக்கு உட்பட்ட கூடலூர் வட்டம், மாயார் அஞ்சல் செல்வப்பா காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரது வீட்டிற்குள் நாயை விரட்டி வந்த சிறுத்தை ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு நுழைந்துவிட்டது.
வீட்டிற்குள் திடீரென சிறுத்தை நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், வீட்டின் உரிமையாளர் பதற்றமடையாமல் துணிச்சலுடன் செயல்பட்டார். சிறுத்தை ஒரு அறைக்குள் நுழைந்ததை கவனித்த அவர், உடனடியாக வெளியிலிருந்து அந்த அறையின் கதவை பூட்டினார். இதனால் சிறுத்தை வெளியே வர முடியாமல் அறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. வீட்டின் உரிமையாளரின் துணிச்சலான செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
தகவல் அறிந்து வந்த மசனகுடி வனத்துறையினர் உடனடியாக முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் உத்திரவின்படி முதுமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ஆணைக்கிணங்க இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து துணை இயக்குனர் ஆணையின்படி சீகூர் காப்பு காட்டில் விடப்பட்டது.