

சென்னை,
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக திகழும் 3 துறைகள் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவை தான். ஆனால், வளர்ச்சிக்கு அவசியமான இந்த 3 துறைகளுக்குமான நிதி ஒதுக்கீட்டை கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு குறைத்து வந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு வங்கி அரசியல் செய்வதற்காக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து குறைத்து வருவது பிற்போக்கானது; கண்டிக்கத்தக்கது.
2012-ம் ஆண்டில் தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ அறிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடுத்த 11 ஆண்டுகளில் தமிழகம் ஆண்டுக்கு தலா 11 சதவீதம் வளர்ச்சியடையும்; 2023-ம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ரூ.7.50 லட்சமாக அதிகரிக்கும்; ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் வருவாய் ரூ.30 லட்சமாக இருக்கும் என அறிவித்தார். இந்த இலக்குகளை எட்ட 11 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்யப்பட வேண்டும். அப்படியானால் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 60 சதவீதம் கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் பாதியைக்கூட தமிழகம் ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு அதன் வருவாய்க் கணக்கு செலவுகளான ரூ.1,93,742 கோடியில் இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக மட்டும் ரூ.75,723 கோடியை, அதாவது 46.25 சதவீதத்தை செலவழிக்கிறது.
இதை முற்றிலுமாக ஒழிக்கக்கூடாது என்பதால், பயனற்ற இலவசங்கள் மானியங்களை ஒழித்தும், வருவாயை அதிகரித்தும் அதன் மூலம் கிடைக்கும் நிதியை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்போது அனைத்துத் துறைகளிலும் பின்னேறிக் கொண்டிருக்கும் தமிழகம் அடுத்த சில ஆண்டுகளில் அதலபாதாளத்தில் விழுவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.