

திருவாரூர்,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
அருள்மிகு தியாகராஜ சுவாமியை தாங்கி வரும் ஆழித்தேரை தன்னகத்தே கொண்டுள்ள, விவசாய பூமியான திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் கோவி சந்துரு அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றேன்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அடிப்படையில் பார்த்தால் கடைசி இரண்டு இடங்களிலும், மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசி 5 இடங்களிலும் உள்ள மாவட்டம் திருவாரூர்.
கடந்த 30 ஆண்டுகளாக, திமுக சட்டமன்ற உறுப்பினரை கொண்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சிக்கான அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை என்பது எவ்வளவு மோசமான நிலை. இந்நிலை மாறி திருவாரூர் மாற்றம் காணவேண்டும் என்றால் திமுகவை நாம் விரட்டியடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
திருவாரூரில் உள்ள பிரச்சனையே பூண்டி கலைவாணன் அவர்கள் தான். கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் ஒருவரை திமுக தனது வேட்பாளராக அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல். கடந்த 5 ஆண்டுகளாக, நெல் கொள்முதல் செய்வதில் இருந்து, தேவையான கிடங்குகள் அமைப்பது வரை அனைத்திலும் விவசாயிகளை வஞ்சித்து விவசாயிகளுக்கு எதிரான தீயசக்தி திமுக துரோகம் செய்தது.
திருவாரூர் பெருமையை மீட்டெடுக்கவும், விவசாயிகள் நலன் காக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் கோவி சந்துரு அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூர் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! திருவாரூர் தொகுதி திருப்பம் காணட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.