

சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளனர். இதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல் என்று பதிவிட்டுள்ளார்.