தியாகி செண்பகராமன் பிள்ளை தியாகத்திற்கு மரியாதை செலுத்துவோம் - நயினார் நகேந்திரன்

தியாகி செண்பகராமன் பிள்ளை துணிச்சலும் தியாக உணர்வும் இன்றைய இளைஞர்களுக்கு என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என நயினார் நகேந்திரன் தெரிவித்தார்.
தியாகி செண்பகராமன் பிள்ளை
Published on

சென்னை,

1891-ல் திருவனந்தபுரம் புத்தன்சந்தை என்ற ஊரில் செண்பகராமன் பிறந்தார். அவரது பெற்றோர் சின்னசாமி பிள்ளை-நாகம்மா ஆவர். குழந்தை பிராயத்திலே செண்பகராமன் பெரும் நாட்டுப்பற்றுடன் இருந்தார். வெள்ளையருக்கு எதிரான அவரின் கலக மனநிலையை உணர்ந்த வெள்ளை அரசு அந்த ஊரை விட்டு அவர் வெளியேறக்கூடாது என தடை விதித்தது.

தென்னாட்டு போஸ்

இவரை தென்னாட்டு போஸ் என்றும், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தையும் கிளர்ந்தெழச் செய்யும் ஜெய்ஹிந்த் என்னும் கோஷத்தின் தந்தையாகவும் போற்றப்படுபவர் மாவீரன் செண்பகராமன். இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைத்தவர்களில் செண்பகராமன் முக்கியமானவர். 1914-ம் ஆண்டு முதல் உலக போர் நடந்த காலமாகும். உலகின் வயிற்றை கங்காரு குட்டி போல் மரண பயம் கவ்வியிருந்தது. இந்தியாவில் பிரிட்டன் மயான அமைதி ஏற்படுத்தி இருந்தது.

குண்டுகள்

செப்டம்பர் 24-ந் தேதியன்று சென்னையில் திடீரென்று மூன்று குண்டுகள் வீசப்பட்டன. துறைமுகம் மற்றும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இரண்டும், உயர்நீதிமன்றத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒன்றும் என மூன்று குண்டுகள் வீசப்பட்டன. எங்கிருந்து வந்தன அந்த குண்டுகள்? வெள்ளையர்கள் தலையை பிய்த்துக்கொண்டனர். நிச்சயம் வான் வழியில்லை.

நீர்மூழ்கி கப்பல்

இவை கடல் வழியே எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மூலம் வந்தவை. கடலில் கப்பல்கள் மிதந்து வருவது ராட்சத வண்ணப்பறவை நீந்துவது போல் இருக்கும். எம்டனோ நீர்மூழ்கி கப்பல் ஆகும். இந்த கப்பலை இயக்கிய வழிகாட்டி செண்பகராமன் ஆவார். பிரிட்டிஷ் கப்பல் படை சுதாரிப்பதற்குள் செண்பகராமன் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி பறந்துவிட்டார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஜெய் ஹிந்த்

ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய புரட்சியாளர் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் வீரத்தாலும் தியாகத்தாலும் அழியாத தடம் பதித்த சுதந்திரப் போராளி செம்பகராமன் பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று.

மரியாதை செலுத்துவோம்

அவரின் துணிச்சலும் தியாக உணர்வும் இன்றைய இளைஞர்களுக்கு என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். இன்றைய தினத்தில் சுதந்திர போராட்ட தியாகி செண்பகராமன் பிள்ளை தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com