

சென்னை,
மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
எண்ணற்ற தேசபக்தர்கள் கனவு கண்டு உருவாக்கிய ஜனநாயக இந்தியாவில், 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசரநிலை ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியலமைப்பின் மீதும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக அமைந்தது.
21 மாதங்கள் நீடித்த அவசர நிலையால், ஜனநாயக நடைமுறைகள் முடக்கப்பட்டன; அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன; தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன; சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், என லட்சத்திற்கும் மேற்பட்டோர் விசாரணையின்றி கைது செய்யப்பட்டனர்.
அந்த காலத்தில் இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்க உறுதியாக நின்று போராடிய அனைவருக்கும் இந்நாளில் மரியாதை செலுத்துகிறோம். ஜனநாயக சுதந்திரங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனி ஒருபோதும் நிகழக்கூடாது என்ற உறுதியை மீண்டும் ஏற்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.