

சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சாதிக் கொடுமைகளுக்கும், சமூக வேற்றுமைகளுக்கும் முடிவு கட்டுவதற்காக தோன்றிய அய்யா வைகுண்டரின் 194-ஆம் அவதாரத் திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் ஆற்றிய பணிகளையும், செய்த சீர்திருத்தங்களையும் , அதற்கான அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் நினைத்துப் பார்க்கிறேன். அடிமைத் தனத்தை ஒழித்து, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகத் தோன்றிய அவரை இந்த நாளில் வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
திருச்செந்தூர் கடலில் அவதரித்த அவர் நேராக சாமிதோப்புக்கு வந்தார். தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று சாதிய கொடுமைக்கு ஆளாகி கூனி குறுகி கிடந்தமக்களை தலை நிமிர செய்தார். யாருக்கும் அஞ்சி நடக்காதீங்கோ, சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும், காணிக்கை வேண்டாதீங்கோ, கைக்கூலி கேளாதீங்கோ என மக்களுக்கு நல் அறிவுரைகளை கூறியதோடு, மக்களை பிரித்தாண்டு கொடுமை படுத்தியவர்களுக்கு அவர்கள் செய்யும் செயலை உணரச்செய்தார்.
அய்யா வைகுண்டரை அடித்தட்டு மக்கள் கடவுளாக கொண்டாடியதை பொறுத்துக் கொள்ள முடியாத திருவிதாங்கூர் மன்னன், அவரை கொலை செய்ய சாராயத்தில் விஷத்தை கலந்து கொடுத்தது, மிளகாய் அறைக்குள் நெருப்பு போட்டு அடைத்தது, சுண்ணாம்பு காளவாயில் வைத்தது, பாலில் விஷம் கலந்து கொடுத்தது, கட்டைகளை அடுக்கி தீயை வைத்து நீந்திக்கொள் என்று அய்யாவை அதில் தூக்கி போட்டது, புலியை பட்டினிபோட்டு அடைத்து வைத்திருந்த கூண்டில் அடைத்தது என பல வழிகளில் கொடுமைப்படுத்திய நிலையில் அனைத்திலிருந்தும் மீண்டு வந்தார்.
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி சாமித்தோப்பு தலைமைப் பதிக்கு சென்ற போது அவரது வரலாற்றை முழுமையாக அறிந்து வியந்தேன். 150 ஆண்டுகளுக்கு முன்பே அவர் செய்த சாதனைகள் வியக்கத்தக்கவை. அய்யா வைகுண்டர் ஆற்றிய பணிகளை இன்றும் தொடர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாட்டில் அவர் கூறிய தாழக்கிடப்பாரை தற்காக்கும் தருமத்தையும், சமூகநீதியையும் தழைக்கச் செய்ய இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.