உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம் - சீமான் மே தின வாழ்த்து

உழைப்புச் சுரண்டலுக்கெதிராக அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

”காலுக்குச் செருப்புமில்லை

கால் வயிற்றுக் கூழுமில்லை

பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே

பசையற்றுப் போனோமடா”

எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.

19-ம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து 1886-ம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சி மிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890-ம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை‌ கடற்கரையில் 1923-ம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நம்முடைய பாட்டன், பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில் உழைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்று தொடங்கி இன்று வரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரமாகும். விவசாயம் முதலாக வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக ஒப்புவித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராடும் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நின்றுள்ளனர் என்பதே கடந்தகால வரலாறாகும்.

ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!

இனியும் வெறும் நாளினை மட்டுமே கொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com