

சென்னை,
ஆயுத பூஜையை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
"பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!" என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள்.
150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 லட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம். ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது.
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில் முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார் பொன்முடியார்.
வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது. வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல; மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது.
அதனால் தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம்.
போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூஜை' விழாவாக இன்றும் தொடர்கிறது. எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.
ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழுந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு.
உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கருவியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்!
அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே!
கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம்.
நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்ணும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்!
அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழிப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.