

சென்னை,
குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை உறுதி செய்வதே நாட்டின் உண்மையான வளர்ச்சி என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகளே ஒரு நாட்டின் எதிர்காலம் அவர்களின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொரு சமூகத்தின் மற்றும் அரசின் முக்கியக் கடமையாகும்.
குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கல்வி மறுப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
சாதி, மதம், மொழி,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி வாய்ப்பும், பாதுகாப்பான சூழலும் கிடைக்க வேண்டும்.
குழந்தைகளின் கனவுகளுக்கு மதிப்பளித்து,அவர்களின் திறமைகளை ஊக்குவித்து, அச்சமின்றி வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவோம். குழந்தைகளின் புன்னகையே நாட்டின் உண்மையான வளர்ச்சியின் அடையாளம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.