

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “குப்பையைப் பிரிப்போம் – நாளையைக் காப்போம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட தெற்கு மாட வீதி பகுதியில் இன்று தொடங்கி வைத்து, உலர்கழிவுகளை தனியே சேகரிப்பதற்கான பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “குப்பையைப் பிரிப்போம் - நாளையைக் காப்போம்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தினை மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கவுஷிக் தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், தெற்கு மாட வீதி பகுதியில் இன்று (07.10.2026) தொடங்கி வைத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “குப்பையைப் பிரிப்போம் - நாளையை காப்போம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 22.08.2026 அன்று தெற்கு வட்டாரத்தில் தொடங்கி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சி.பி.சி.எல். நிறுவனத்தின் உதவியுடன், உர்பேசர் நிறுவனம் மூலம் 1,000 உலர் கழிவு சேகரிப்புப் பைகள் இன்று அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டன.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் மக்கும் கழிவு மற்றும் மக்காத/உலர் கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான நகரம் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
“குப்பையைப் பிரிப்போம் - நாளையைக் காப்போம்” என்ற நோக்கத்துடன் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கி, சென்னை மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் தேனாம்பேட்டை மண்டல அலுவலர் எஸ்.செந்தில்குமரன், மாநகராட்சி அலுவலர்கள், உர்பேசர், சி.பி.சி.எல். நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.