தமிழக மீனவர்கள் 108 பேரை விடுவிக்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

மீனவர்கள் 108 பேர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். #EdappadiPalinasamy #TNnews
தமிழக மீனவர்கள் 108 பேரை விடுவிக்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
Published on

சென்னை,

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 108 பேர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் மீன்பிடித்து வரும் சூழ்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக, எல்லை தாண்டி வரும் சூழ்நிலையில் கடும் அபராதம் விதிக்கிற வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளதையும், இது தமிழக மீனவர்களுக்கு மிகவும் ஆபத்தான சட்டம் என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இன்றைக்கு (நேற்று) கூட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 8 பேரையும், 2 மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு பிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் இச்சூழ்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவோருக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றம் சட்டம் இயற்றி, அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறது.

இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட மசோதாவின்படி, தவிர்க்கமுடியாமல் எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் மீது பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக அபராதமும் (இந்திய மதிப்பின்படி சில கோடிகள்) விதிப்பது சாத்தியமாகி விடும். இலங்கை அரசின் இந்த புதிய நடவடிக்கை தமிழக மீனவர்கள் குறிப்பாக பாரம்பரிய எல்லைகளில் மீன்பிடித்து வருவோருக்கு பதற்றத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் பிடிக்கப்பட்டு, அந்நாட்டு கடல் எல்லைகளில் தமிழக மீனவர்களின் ஆதாரமான மீன்பிடி படகுகள் 163 என்ற எண்ணிக்கையில் உள்ளன. நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருக்கும் அந்த படகுகள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றன. எனவே அந்த படகுகள் முழுவதும் சேதமடைந்து இனி பயன்படுத்தவே முடியாத நிலைக்கு சென்றுவிடுவதற்கு முன்பே தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை சிறைகளில் வாடிவரும் 108 மீனவர்களையும், அவர்களது 165 படகுகளையும் (நேற்று கைதான ஜெகதாபட்டினம் மீனவர்கள், படகுகளையும் சேர்த்து) விடுவிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் நல்லுறவு ஏற்படும் சூழலில் தமிழக மீனவர்களுக்கு ஆபத்தான சட்ட மசோதாவை இலங்கை அரசு நிறைவேற்றாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு வாழ்வாதாரத்துக்காக போராடும் தமிழக மீனவர்கள் நலனை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com