தமிழகத்தில் நூலகங்களை 4 வாரத்தில் திறக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் உள்ள நூலகங்களை 4 வாரத்தில் திறக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழகத்தில் நூலகங்களை 4 வாரத்தில் திறக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

போட்டித்தேர்வுக்கு உதவும் நூலகங்கள்

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர மருத்துவமனைகள், சிறைகள், பாஸ்போர்ட்டு அலுவலகங்களிலும் நூலகங்கள் செயல்படுகின்றன. ஊரடங்கினால் மூடப்பட்ட பல்வேறு நூலகங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

நீச்சல் குளங்கள், பார்களும் செயல்படுகின்றன. ஆனால் நூலகங்களுக்கு மட்டும் இன்னும் உரிய அனுமதி வழங்கவில்லை. தற்போது போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாணவர்கள் உள்பட பலதரப்பட்டவர்களும் தயாராவதற்கு நூலகங்கள் உதவியாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்கவும், அவை வழக்கம்போல் இயங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

4 வாரத்தில் திறக்க வேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரத்தில் திறக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.அழகுமணி, மதுரை சிம்மக்கல்லில் உள்ள மைய நூலகத்தில் நாட்டுப்புற கலைகளுக்கான நூலகம் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்ததை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து நூலக அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com