தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்துகள் விதிகள், 1945-இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்துகள் மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் விதி மீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த (01.04.2023 - 31.12.2023) 9 மாதங்களில் 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 381 மருந்து விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களில் 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com