டிரைவர், கிளீனருக்கு ஆயுள் தண்டனை

ராணுவ வீரர் மீது வேனை ஏற்றி கொன்ற வழக்கில் டிரைவர், கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
டிரைவர், கிளீனருக்கு ஆயுள் தண்டனை
Published on

களியக்காவிளை:

ராணுவ வீரர் மீது வேனை ஏற்றி கொன்ற வழக்கில் டிரைவர், கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ராணுவ வீரர்

குழித்துறை தெற்றிவிளையைச் சேர்ந்த ஜான் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 27). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். 2013-ம் ஆண்டு இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியது தொடர்பாக சுரேஷ்குமாருக்கும், பாலவிளை பெரியவிளையை சேர்ந்த வேன் டிரைவர் தனபாலன் (45) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுரேஷ்குமார் மீது தனபாலன் ஆத்திரத்தில் இருந்தார்.

வேன் ஏற்றி கொலை

பின்னர் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி அன்று சுரேஷ்குமார் குழித்துறை அருகே கள்ளுக்கட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் தனபாலன் வேனை ஓட்டி சென்றார்.

அந்த சமயத்தில் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனபாலன் திடீரென வேனால் சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளினார். இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் நடத்திய விசாரணையில், டிரைவர் தனபாலனும், அந்த வேனில் கிளீனராக இருந்த பிலாவிளையை சேர்ந்த அனீசும் (25) சேர்ந்து திட்டமிட்டு ராணுவ வீரரை கொலை செய்தது அம்பலமானது.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

மேலும் இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு குழித்துறை முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட தனபாலன், அனீஸ் ஆகிய 2 பேரையும் குற்றவாளி என அறிவித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பு கூறினார். அதில், 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராபி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com