அடகு வைத்த 5 பவுன் நகையை திருப்பி கேட்டதால் ஆத்திரம்: பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

அடகு வைத்த 5 பவுன் நகையை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகரை சேர்ந்தவர் விசாலாட்சி (65 வயது). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். விசாலாட்சியின் மகள் வழி பேரன் சதீஷ் (34 வயது). செங்குன்றம் காந்திநகரை சேர்ந்த இவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். சதீஷ் தனது பாட்டி வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

குடும்ப செலவுக்காக விசாலாட்சியிடம் 5 பவுன் நகையை வாங்கி சதீஷ் அடகு வைத்திருந்தார். அந்த நகையை திருப்பி தருமாறு, அவரிடம் விசாலாட்சி கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் மீட்டு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி தனது மனைவியின் பிரசவ சிகிச்சை செலவுக்கு பணம் கேட்டு, விசாலாட்சியின் வீட்டிற்கு சதீஷ் சென்றார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். மேலும் தான் கொடுத்த நகையை திருப்பி தரவில்லை என அவர் தரக்குறைவாக பேசியிருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ், பாட்டி விசாலாட்சியை சுத்தியால் தாக்கியும், கழுத்தை பிளேடால் கீறியும் கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 18-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவஸ்தன் தீர்ப்பு அளித்தார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதில் கொலையாளி சதீசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ஜெய்சங்கர் ஆஜராகி வாதாடினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com