16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த புளியங்குடி பகுதியைச் சேர்ந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (வயது 45) என்பவர் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று கருப்பையாவை குற்றவாளி என உறுதி செய்து சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதமும் விதித்து மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த விளாத்திகுளம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. ஜுடு ஏஞ்சலோ அவர்களையும், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் திருமதி. ஸ்டெல்லா மேரி, திருமதி. சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com