வாலிபருக்கு ஆயுள் தண்டனை

போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டுவை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Published on

ஓசூர்

போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டுவை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நகை பறிப்பு

ஓசூரை சேர்ந்தவர் பார்வதி. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த 15.6.2016 அன்று இவர் உத்தனப்பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்து சென்றனர். அந்த குற்றவாளிகள் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அன்றைய தினம் ஓசூர் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், தற்போதைய தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டருமான நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் ஏட்டு முனுசாமி இறந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

கொள்ளையன் இறந்தான்

இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூரு அருகே கே.ஆர்.புரா பக்கமுள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (20), ஓசூரை சேர்ந்த முஜாமில் (22), பெங்களூருவை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி (22), அமர் (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதில் கொள்ளையன் கிருஷ்ணமூர்த்தி அன்றைய தினமே (16.6.2016) போலீசார் அழைத்து வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.

இந்த வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே, விக்கி தற்கொலை செய்து கொண்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரோசிலின் துரை நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக முஜாமில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமர் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com