

சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தற்போது 52,929 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தான் 4,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்.
* காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்.
* நோய்த் தொற்று அறிகுறி தோன்றுவதற்கு முன்பே நோயாளிகளை கண்டறிய முகாம்கள் உதவும்.
* பரிசோதனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.
* 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம்.
* முகாம்களில் தரமான உணவு வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும்.
* செங்கல்பட்டில் போதுமான வசதிகள் உள்ளன.
* கொரோனா குறித்து பொது மக்களும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்.
* இ-பாஸ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.