

சென்னை,
சென்னையில், முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகம் முழுவதும் 270 பிரிவுகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக 70 சிங்கப்பெண் படைகள் தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) இயங்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிங்கப்பெண் படை மிடுக்காக வலம் வரும். சென்னையில் 12 சிங்கப்பெண் படைகள் அதிரடி காட்ட போகிறார்கள்.
தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரகங்களில் தலா 4 சிங்கப்படைகள் செயல்பாட்டில் இருக்கும். இதுதவிர இதர போலீஸ் கமிஷனரங்களில் தலா 2 சிங்கப்படைகள் இருக்கும். ஒவ்வொரு சிங்கப்படையிலும் 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், ஒரு போலீசாரும் முதலில் ரோந்து வருவார்கள். இதற்காக பிரத்யேகமாக 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 420 பெண் போலீசார் இப்படையில் பணியாற்றுவார்கள்.
இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். சிங்கப் படையில் முழுக்க, முழுக்க பெண் போலீசார்தான் பணியில் இருப்பார்கள். பெண் போலீசாருக்கு கார் டிரைவர் உள்ளிட்ட சில துணை பணிகளில் ஆண் போலீசார் உதவி செய்வார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள், சிங்கப்படையை தொடர்பு கொள்வதற்கு தனி 'வாட்ஸ்-அப்' குழுக்கள், செல்போன் எண்கள் போன்றவையும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது போலீஸ் அவசர கட்டுப்பாடு மையத்தின் 100 எண்ணை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பயன்பாட்டுக்காக 319 4 சக்கர வாகனங்களும், 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும்.