தேனி அருகே தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் மதுபாட்டில்கள் - போதை கும்பலின் அட்டூழியம்!

இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் மதுபாட்டில்கள் - போதை கும்பலின் அட்டூழியம்!
Published on: 

தேனி,

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்களை கட்டி ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவாரம் அருகே பண்ணைப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கரியணம்பட்டி, பண்ணைப்புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், பள்ளி மைதானத்தில் உள்ள தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்களை கயிற்றில் கட்டி ஏற்றியுள்ளனர். மேலும், இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காலி மதுபாட்டில்களை அகற்றினர். மேலும், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வீடியோவையும் நீக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்களை ஏற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X