மதுபிரியர்கள் தாராளம்: முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் ரூ.252½ கோடிக்கு மது விற்பனை சென்னை மண்டலம் முதல் இடம்

முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.252½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. சென்னை மண்டலம் அதிக விற்பனையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
மதுபிரியர்கள் தாராளம்: முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் ரூ.252½ கோடிக்கு மது விற்பனை சென்னை மண்டலம் முதல் இடம்
Published on

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக மது விற்பனை செய்யப்படும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று பெரும்பாலான மதுபிரியர்கள் மது அருந்துவதை வழக் கமாக வைத்திருக்கிறார்கள்.

அன்றைய தினம் மது அருந்துவதை மட்டும் தவற விடுவதே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்ததையடுத்து நேற்று முன்தினம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் மதுபிரியர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க காத்து நின்று பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

ரூ.252 கோடி விற்பனை

மது இல்லா' ஞாயிற்றுக்கிழமையை சந்தித்துவிடக்கூடாது என்பதில் சில முரட்டு மதுபிரியர்கள் உறுதியாக இருந்தனர். இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, மதுபானங்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். நேற்று குடிப்பதற்கு தேவையான மதுபானங்களை சனிக்கிழமையன்று இரவே மதுபிரியங்கள் வாங்கி இருப்பு வைத்தனர். சனிக்கிழமையன்று மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.58.37 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இதையடுத்து மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடியும், கோவை மண்டலத்தில் 48.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடியும் வியாபாரம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள தலைநகர் சென்னை தான், மது விற்பனையிலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

முழுமையான ஊரடங்குக்கு முந்தைய நாளில் மட்டும் மதுபிரியர்கள் ரூ.252.48 கோடிக்கு மது வாங்கி, தங்கள் தாராள மனப்பாங்கை காட்டியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com