

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக விஜய் உரிமை கோரினார்.
முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கவர்னர் அர்லேகரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை கவர்னரிடம் அவர் வழங்கினார். தொடர்ந்து கவர்னரை விஜய் சந்தித்துள்ள நிலையில், ஆட்சியமைக்க கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல்-அமைச்சராக விஜய் நாளை பதவியேற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.