போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நேரடி நெல் விதைப்பு பணி

குத்தாலம் அருகே மேலபருத்திக்குடியில் போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது
போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நேரடி நெல் விதைப்பு பணி
Published on

குத்தாலம்:

குத்தாலம் அருகே மேலபருத்திக்குடியில் போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

நேரடி நெல் விதைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிட்டனர். இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து கடந்த 27-ந் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

144 தடை உத்தரவு

இந்த நிலையில் மேலபருத்திக்குடி கிராமத்தில் 3 விவசாயிகள் நேற்று 18 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து மேலபருத்திக்குடி பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் 3 துணை சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர்.144 தடை உத்தரவால் மேலபருத்திக்குடி பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com