

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி) எழுந்து, கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அவர் பேசும்போது, சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமாக உள்ள வீடுகளின் வாடகையையும், பராமரிப்பு கட்டணத்தையும் குறைக்க வேண்டும். ரூ.6 ஆயிரமாக இருந்த வாடகை 300 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.20 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
லாயிட்ஸ் காலனியில் அரசு அலுவலர் குடியிருப்பு, வாரிய வாடகை குடியிருப்பு என இரு வகையான குடியிருப்புகள் உள்ளன. வாரிய வாடகை பொது ஒதுக்கீடு குடியிருப்புகளுக்கான வாடகையினை, அரசு பொது ஒதுக்கீடு குடியிருப்புகளுக்கான வாடகையுடன் ஒப்பீடு செய்தலில், வாரிய வாடகையானது மிகவும் குறைவாக இருந்ததால், அரசு பொது வாடகை குடியிருப்புகளுக்கு வசூல் செய்யப்பட்டு வரும் வாடகையினையே, வாரிய வாடகை குடியிருப்புகளுக்கும் நிர்ணயம் செய்ய வாரியத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டதில், அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள பொது ஒதுக்கீட்டிற்கு உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணத்தை பின்பற்றி, வாரிய வாடகை குடியிருப்புகளில் உள்ள பொது ஒதுக்கீடு குடியிருப்புகளுக்கும் 1-2-2020 முதல் வாடகையை உயர்த்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மாநகரில் உள்ள தனியார் வாடகை வீடுகளுக்கு, சந்தை மதிப்பாக சதுர அடி ஒன்றிற்கு தோராயமாக ரூ.25 உள்ளது. இதை ஒப்பிடுகையில் வாரிய குடியிருப்புகளுக்காக தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட வாடகை மிகவும் குறைவாகவே உள்ளது. என்றாலும், வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து, முதல்-அமைச்சருடன் கலந்து பேசி, வாடகை, பராமரிப்பு கட்டணத்தை குறைக்க நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.