தேர்தல் வாக்குறுதி படி கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்
Published on

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-

கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி... முதல்-அமைச்சர் அறிவிப்பை மீண்டும் மறுபரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்....

தள்ளுபடி

மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் சிறு-குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பை 25.5.2026 அன்று முதல்-அமைச்சர் வெளியிட்டார். அதன்படி 50 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு முழுவதும் தள்ளுபடி, 50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என்றும், இதற்கு மேல் கூடுதலாக கடன் பெற்ற ஒவ்வொரு பத்தாயிரத்துக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி என்று அறிவித்தார்.

போராட்டம் நடைபெற்றது

அதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மறுநாள் 26.5.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 02.06.2026 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து, தேர்தல் வாக்குறுதி படி 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம்.

அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

அதன் அடிப்படையில் இன்று (16.06.2026) 75,000 ரூபாய் வரை பெற்றுள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்தும், 75,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35000 தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது ஒரு சிறிய முன்னேற்றம். ஆனால் தேர்தல் வாக்குறுதி படி முழுமையாக கடன் தள்ளுபடி செய்தால் தான் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.

தொடர்முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது

எனவே, மாநில அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதி படி கடன் தள்ளுபடி செய்திட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 22.6.2026 அன்று சென்னையிலுள்ள மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com