உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பு வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்த தடை

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அதில் கூறப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பு வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்த தடை
Published on

சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

அதேபோல், 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் காலியிடங்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது.

தேர்தலின் போது வேட்பாளர்கள் பிரசாரம், பொது கூட்டங்கள் நடத்தும்போது கொரோனா நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதுடன், உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகளையும் கடைப்பிடித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஆணையம் கேட்டு கொண்டு உள்ளது.

நடத்தை விதிகள்

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு நடக்கும் தற்செயல் தேர்தல்களை ஜனநாயக முறைப்படியும், நேர்மையாகவும் நடத்துவதற்கான பணிகளில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதில் வேட்பாளர்கள் நடத்தை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதிகள் மற்றும் சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் இனத்தினரிடையே நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் வகையிலோ அல்லது ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலோ அல்லது கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலோ எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது.

வழிப்பாட்டு தலங்கள்

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக் கூடாது. வாக்குகளை பெற மத சின்னத்தை பயன்படுத்துதல் மற்றும் தேசியக்கொடி அல்லது தேசிய முத்திரை போன்ற தேசிய சின்னங்களை பயன்படுத்த கூடாது.

பிற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும் போது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர்களின் கடந்த கால பணி மற்றும் செயல்பாடு குறித்தே இருக்க வேண்டும். மாறாக தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மைகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

தனிநபர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது மறியல்களில் ஈடுபடக் கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சமோ, பரிசுகளோ வழங்கக் கூடாது.

அதேபோல், வாக்குரிமையிலும் தலையிடக் கூடாது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றுவர போக்குவரத்து வசதிகள் அல்லது போக்குவரத்து சாதனங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம். போதையூட்டும் மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் வழங்கப்படும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய கூடாது.

ஒலிபெருக்கி பயன்பாடு

தனிநபர்களின் இடங்கள், பொது இடங்களில் தொடர்புடையவர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கொடிக் கம்பங்கள், பதாகைகள், அறிவிப்புகள் ஒட்டவும், வாசகங்கள் எழுதவும் தடை செய்யப்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது.

காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் மட்டுமே அனுமதி பெற்ற ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com