

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் பால், குடிநீர், மருத்துவ பொருட்கள் தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், தமிழகத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள், அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான மது பாட்டில்களை வாங்குவதற்காக மதுக்கடைகளில் குவிந்தனர். கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்தவர்கள் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பைகளில் போட்டுக் கொண்டு சென்றனர்.
கர்நாடக மாநிலத்தில் காலை 10 மணி வரை மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த போது, மதுப்பிரியர்கள் கர்நாடக எல்லைக்குச் சென்று மதுபானங்களை வாங்கி வந்தனர்.
தற்போது கட்டுப்பாடுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், கர்நாடக எல்லைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மதுப்பிரியர்கள் அத்திப்பள்ளியில் மது வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.