போலீசாரை கண்டித்து பெரம்பலூரில் நகைக்கடைகள் அடைப்பு

போலீசாரை கண்டித்து பெரம்பலூரில் நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
Published on

ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜசேகரன். இவரையும், அவருடைய மனைவி லட்சுமியையும் திருட்டு நகையை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 22-ந்தேதி விசாரணைக்கு திருச்சி அழைத்து வந்தனர்.

அதன்பிறகு நகை வியாபாரிகள் உள்ளிட்டோர் முயற்சியால் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். இருப்பினும் மனமுடைந்த ராஜசேகரன் சம்பவத்தன்று செட்டியக்காடு என்ற பகுதிக்கு சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

இந்த சம்பவத்தில் போலீசாரை கண்டித்து பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளர்கள் நேற்று காலை முதல் மதியம் வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் நகரில் உள்ள 80 நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பெரம்பலூர் நகர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமையில், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் செல்வராசு ஆகியோர் முன்னிலையில், அச்சங்கத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் கடைவீதி நகைக்கடை பஜார் பிள்ளையார் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் போலீசார் விசாரணையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர் ராஜசேகரனின் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவாத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். மதியத்திற்கு பிறகு நகைக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com