ராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 57 வழக்குகளுக்கு சமரச தீர்வு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 57 வழக்குகளில் ரூ.2 கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 57 வழக்குகளுக்கு சமரச தீர்வு
Published on

லோக் அதாலத்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கினார். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். விரைவு மகிளா நீதிபதி கோபிநாத், முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நீதித்துறை நடுவர் நீதிபதி பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி குமரகுரு பேசியதாவது:- இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினரும் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. இதனால் பணம், காலம் மிச்சமாகிறது. இருதரப்பினருக்கும் இடையே உள்ள உறவுகள் மேம்படுகிறது.

சமரச தீர்வு

வழக்கில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்ப கிடைக்கப்படுகிறது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய கோர்ட்டுகளில் 8 அமர்வுகளில் நடைபெற்று உள்ளது. சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகளை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பேசி சமரச தீர்வு காணலாம். இவ்வாறு பேசினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 535 வழக்குகள் எடுத்துக்கொண்டு அதில் 57 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 568 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் வக்கீல் சங்க இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com