சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகள்: கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அனுமதியுடன் மரக்கட்டைகள் வெட்டப்பட்டு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி மலைப்பகுதியில் வெட்டப்படும் மரக்கட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலமாக திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மலைப்பாதையில் கொண்டு செல்வதற்கு மாவட்ட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மரக்கட்டைகளுடன் செல்லும் லாரிகள் பெருமாள்மலை வனத்துறை சோதனை சாவடியில் பதிவு செய்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் அதிக பாரத்துடன் பெருமாள்மலை பிரதான மலைப்பாதையில் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்ந்தபடி சென்றது. மேலும் உள்ளூர் மக்களும் பெரும் அவதியடைந்தனர். எனவே மாவட்ட வனத்துறை கவனம் செலுத்தி இந்த பகுதியில் நிறுத்தப்பட்ட லாரிகளை போக்குவரத்து நெரிசல் இன்றி அப்புறப்படுத்த வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் மரக்கட்டைகளை லாரிகளில் ஏற்றி வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






