

திருப்பூர்,
வேலூரை சேர்ந்த 22 வயது பெண் திருமணம் முடிந்து தனது கணவருடன் கேரளத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் வேலை தேடி அவர் கடந்த 15-ந் தேதி இரவு ரெயில் மூலம் திருப்பூர் வந்தார். பின்னர் மத்திய பஸ் நிலையத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றிருந்தார். இதைகவனித்த வாலிபர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார்.
வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி நள்ளிரவில்அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில்ஏற்றிக் கொண்டு விஜயாபுரம் நோக்கி அழைத்துச்சென்றார். அங்குள்ள காட்டுப்பகுதிக்கு வந்ததும், அந்த பெண்ணை கீழேஇறக்கிய அந்த வாலிபர், கையை பிடித்து இழுத்துபெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால்அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டு ஓடி அருகே உள்ள பேக்கரி கடைக்காரரிடம் நடந்த விசயத்தை கூறினார்.
அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்ததும் நல்லூர் போலீசார் சென்று அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அந்த பெண் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மத்திய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த பெண்ணை அழைத்துச்சென்ற வாலிபர் குறித்து துப்பு துலக்கினார்கள்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த பைசல் அகமது (வயது 23) என்பவரை திருப்பூரில் பிடித்தனர். விசாரணையில், அவர் லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த பைசல் அகமது, பெண் ஒருவர் தனியாக இருப்பதை கவனித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம் சென்ற பைசல் அகமது, தான் பனியன் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் மையம் நடத்தி வருவதாகவும், தனக்கு தெரிந்த பனியன் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பாதுகாப்பாக வேலை செய்யலாம் என நம்பும்படி கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு விஜயாபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது வழியில் நல்லூரில் உள்ள காட்டுப்பகுதியில் இறங்கி அந்த பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பைசல் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.