

தஞ்சாவூர்;
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
லாரி டிரைவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மேல காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 48). லாரி டிரைவர். கடந்த 2017-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 15 வயதான சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்து தப்பி வந்த அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து அங்கு இருந்தவர்களிடம் கூறினாள்.
கைது
சிறுமி கூறியதை கேட்ட அவர்கள் இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கூலி வேலைக்கு சென்று இருந்த சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராஜை கைதுசெய்தனர்.
ஆயுள் தண்டனை
இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. அதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஜெயராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.