தமிழகத்தில் 27-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் - சம்மேளன தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் 27-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் - சம்மேளன தலைவர் அறிவிப்பு
Published on

நாமக்கல்,

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சம்மேளன தலைவர் குமாரசாமி, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஒளிரும் பட்டை ஒட்டுவதில் சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி பழைய நிலையே தொடர வேண்டும்.

ஜி.பி.எஸ். கருவியை பொறுத்தவரையில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உற்பத்தியாளர்களே வாகனத்தில் பொருத்தி அனுப்புகிறார்கள். ஆனால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்வது இல்லை. குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ். கருவியை வாங்கி பொருத்தினால் மட்டுமே தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க முடியும் என நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.

எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்தும் வருகிற 27-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அவ்வாறு எங்களது போராட்டம் தொடங்குமானால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்.

அதே நேரத்தில் வேலைநிறுத்தம் தொடங்க இன்னும் 21 நாட்கள் உள்ளன. அதற்குள் அரசு எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகதீர்வு காண முன்வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com