

சென்னை,
தமிழகத்தில் சுமார் 37,328 ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில், விற்பனை கணக்கீடு இயந்திரம் எடைக் கருவிகளுடன் இணைக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் துல்லியமான எடையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை அனுப்பும்போது அவ்வாறு துல்லியமாக எடை போடுவது கிடையாது. மாறாக, அங்குள்ள ஊழியர்கள் பதிவேடுகளில் ஒரு மூட்டையின் எடை 50.65 கிலோ என்று குறித்து வைத்துக்கொண்டு லாரிகளில் அனுப்புகின்றனர்.
ஆனால், இந்த மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வந்த பிறகு, அதை எடை போட்டு பார்த்தால், 47 முதல் 48 கிலோ என்ற அளவிலேயே குறைவாக இருக்கிறது. லாரிகளிலும் உணவுப் பொருட்கள் அதிகம் சிந்தி வீணாவதால், ஆண்டுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூ.200 கோடி நஷ்டத்தை சந்திக்கிறது.
எடை குறைவான மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வந்து சேர்வதால், சரியான எடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும்போது பற்றாக்குறை ஏற்படுவதாக கடை ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பிறகு, பற்றாக்குறையை சரிகட்ட, பொருட்களை வாங்காத பொதுமக்களின் ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி, போலிப் பதிவுகள் மூலம் கணக்கைச் சரிக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்கள் ஏற்றப்படும்போதே, ஒவ்வொரு மூட்டையையும் துல்லியமாக அளவிட டிஜிட்டல் எடைத் தராசுகளை பயன்படுத்த வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின்னணு எடை தாரசுகள் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. லாரிகளில் பொருட்களை ஏற்றும்போதும், இறக்கும்போதும் எடையை டிஜிட்டல் முறையில் துல்லியமாகப் பதிவு செய்வதன் மூலம், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் ரூ.200 கோடி நஷ்டத்தையும் தவிர்க்க முடியும்.
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்பிரச்சனை தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், விரைவில் இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.