டீசல் விலை உயர்வால் நஷ்டம்... தனியார் பஸ் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

டீசல் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்புக்கு ஏற்ப பயணிகள் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டீசல் விலை உயர்வால் நஷ்டம்... தனியார் பஸ் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?
Published on: 

சென்னை,

தமிழகத்தில் தனியார் பஸ்களுக்கான பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 4,600 தனியார் பஸ்கள்

தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், நீலகிரி ஆகிய பகுதிகளைத் தவிர மற்ற மாவட்டங்களில் சுமார் 4,600 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கான கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு மாற்றியமைக்கப்படவில்லை. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக டீசல் விலை மற்றும் பஸ்களுக்குத் தேவையான உதிரி பாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கட்டணத்தை உயர்த்த உரிமையாளர்கள் கோரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை தமிழக அரசு நிதி உதவி அளித்து ஈடுகட்டி வருகிறது. ஆனால், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இதுபோன்ற நிதி உதவிகள் கிடைப்பதில்லை. இதனால், டீசல் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்புக்கு ஏற்ப பயணிகள் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போது, போக்குவரத்து வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தீவிர ஆலோசனை

தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட குழுவினருடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:- அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை தமிழக அரசு நிதி உதவி மூலம் ஈடுசெய்து வருகிறது. எனவே, அங்கு கட்டண உயர்வு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சில நடைமுறைகள் உள்ளன. ஆனால், தனியார் பஸ்கள் முழுமையாக பயணிகள் கட்டண வருவாயையே நம்பியுள்ளன. இதனால், தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் பஸ்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், அவ்வாறு உயர்த்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X