காதல் விவகாரம்: வகுப்பறையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - காதலன் கைது


காதல் விவகாரம்: வகுப்பறையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - காதலன் கைது
x

கோப்புப்படம் 

கோவை அருகே கல்லூரி வகுப்பறையில் வைத்து மாணவியை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 17 வயது மாணவி பி.டெக். ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்து வரும் 18 வயது மாணவரும், அந்த மாணவியும் நட்பாக பழகினர். பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் இருவரும் 3 மாதமாக காதலித்து வந்தனர்.

இதற்கிடையே அதே கல்லூரியில் படித்து வரும் மற்றொரு மாணவர், அந்த மாணவியை சந்தித்து, காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனாலும் தன்னை காதலிப்பதாக கூறிய அந்த மாணவரிடம், நட்புரீதியில் மாணவி பேசி வந்துள்ளார்.

இது அந்த மாணவியின் காதலனுக்கு தெரிய வந்தது. உடனே, அவர் தனது காதலியை சந்தித்து இனிமேல் நீ அவனுடன் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனாலும் அவருடன், மாணவி பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர், தனது காதலியிடம் சென்று ஏன் நீ அவனிடம் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவி, நட்பு முறையில் பேசுவதாக கூறியுள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை வகுப்பறையில் அந்த மாணவருடன், மாணவி பேசிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த காதலன், தனது காதலியை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காதலன், தனது பையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாணவியின் கன்னம் மற்றும் கையில் குத்திவிட்டு, தப்பி ஓடினார்.

இதில் காயமடைந்த மாணவியை சக மாணவ, மாணவிகள் மீட்டு சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காதலனை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் கல்லூரி வகுப்பறைக்குள் மாணவியை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story